தேடு

Wednesday, August 31, 2011

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம்-ரமணர்



மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.

Saturday, August 27, 2011

அர்த்தமுள்ள இந்துமதம்


பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:
ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி
நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.
அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.
அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.
அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.
நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!
கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.
சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.
லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.
கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.
`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.
திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.
நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.
நல்லது.
இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.
ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.
மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.